×

கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து: நிதி தந்தவர்கள், பெற்ற கட்சிகள் விவரம் மார்ச் 13க்குள் இணையதளத்தில் வெளியிட கெடு; உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நேற்று அதிரடியாக ரத்து செய்தது. நிதி அளித்தவர்கள், பெற்றவர்கள் பற்றிய விவரத்தையும் இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால், அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அப்போதைய ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

இதன்படி புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின்படி, அரசியல் கட்சிகளுக்கு உச்ச வரம்பின்றி யாரும் தாராளமாக நன்கொடை வழங்க முடியும். இதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த பத்திரத்தில் எந்த கட்சியின் பெயரும் இருக்காது. யார் வாங்கினார்கள் என்ற பெயர் விவரமும் இடம் பெறாது. அந்த பத்திரத்தை பெற்ற கட்சிகள் வங்கியில் டெபாசிட் செய்து பணத்தை பெறலாம்.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு எதிராக தொடரப்பட்ட நான்கு பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தொடர் விசாரணை நடத்தியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ‘‘தேர்தல் பத்திர சட்டம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி , அது யார் மூலம் வழங்கப்பட்டது உட்பட அனைத்து விவரங்களும் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட தரவின் தகவல்களை அறிக்கையாக இரண்டு வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவே அதை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. மொத்தம் 232 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் 88 பக்க தனி தீர்ப்பும் இடம் பெற்றிருந்தது.

தலைமை நீதிபதி மற்றும் இதர 4 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய குடிமக்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 19(1) (ஏ)வை முழுமையாக மீறும் வகையில் உள்ளது. அதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் முரணாக உள்ளது. ஒன்றிய அரசு உள்பட அரசிடம் கணக்கு மற்றும் கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. தேர்தல் பத்திரம் உள்பட அனைத்துக்கும் இது பொருந்தும். கருப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

அதற்கு தேர்தல் பத்திரங்கள் சரியான ஒன்றாக அமையாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. மேலும் விசாரணையின்போது அதுகுறித்த உரிய காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்குபவர்கள் எந்த கட்சிக்கு வழங்குகிறார்களோ, அவர்களது கட்சி நிலைப்பாடு குறித்த விவரங்கள் வெளிப்படையாக தெரியும். அதே நேரத்தில் இத்தகைய தகவல்களை பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அதேபோன்று அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர், அதன் மூலம் அரசின் கொள்கை உருவாக்கத்தின் போது, அதில் அவரது செல்வாக்கை செலுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் கொள்கையில் இருக்கும் அனைத்து ரகசிய விவரங்களும் நிதி கொடுப்பவருக்கு தெரிய வரும். இதைத்தவிர பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்கி விட்டு, அதற்கு கைமாறாக வேறுவிதமான பிரதிபலன்களை எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. அதனால் தற்போதைய விதிமுறைகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திரங்கள் முறை திட்டம் சட்ட விரோதமாக உள்ளது என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.

குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29(1) (சி) திருத்தம் மற்றும் ஐ.டி. சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை. பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். மேலும் கடந்த 2019 ஏப்ரல் 12 தேதி முதல் இந்த தீர்ப்பு வரும் வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர், அதை நன்கொடையாக பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வரும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவின் மூலம் தேர்தல் பத்திரங்கள் சட்டம் மட்டும் அல்ல, தேர்தல் பத்திரங்களை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட அனைத்து கம்பெனி சட்டத்திருத்தங்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஏனெனில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளை வழங்க அனுமதிக்க முடியாது. இதுவரை அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் இன்னமும் காலாவதி ஆகாமல் இருந்தால், அதற்கான பணத்தை அதை வாங்கியவரின் வங்கி கணக்கில் ஸ்டேட் வங்கி திரும்பி செலுத்த வேண்டும்” என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் 74 பக்க தனி தீர்ப்பும் இணைக்கப்பட்டிருந்தது. அதில், தலைமை நீதிபதி மற்றும் இதர 3 நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தனது கருத்துக்களை சொல்லியுள்ளார்.

* சுப்ரீம் கோர்ட்டின் 6 உத்தரவுகள்
1. தேர்தல் பத்திரங்கள் விற்பனையை ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும்.
2. 2019 முதல் பத்திரம் வாங்கியவர்கள் விவரத்தை ஸ்டேட் வங்கி சமர்பிக்க வேண்டும்.
3. கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களையும் ஸ்டேட் வங்கி தாக்கல் செய்ய வேண்டும்.
4. இந்த தரவுகளை மார்ச் 6க்குள் தேர்தல் கமிஷனில் ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
5. மார்ச் 13க்குள் தேர்தல் ஆணையம் இதை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
6. அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களின் தொகையை வாங்கியவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் சொன்னது என்ன?
* தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய குடிமக்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 19(1) (ஏ)வை முழுமையாக மீறும் வகையில் உள்ளது.
* தகவல் அறியும் சட்டத்துக்கும் முரணாக உள்ளது.
* ஒன்றிய அரசு சொல்வது போல் கருப்பு பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒழிக்க முடியாது.
* அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்கள் பிரதிபலன் எதிர்ப்பார்க்க வாய்ப்பு உள்ளது.
* கடந்த 2019 ஏப்ரல் 12 தேதி முதல் இந்த தீர்ப்பு வரும் வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர், பெற்றவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அரசின் கொள்கை முடிவுகள் அவர்களுக்கு முன்கூட்டியே தெரிய வாய்ப்பு உள்ளது.
* பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
* இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியை நிதி அளித்தவர்களிடமே அந்தந்த அரசியல் கட்சிகள் உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும்.

* உச்ச நீதிமன்றம் மிகச்சரியான தீர்ப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
தேர்தல் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானவை என உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்திடும். இந்த தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது.

பாஜவுக்கு காங்கிரசைவிட
6 மடங்கு அதிக நிதி
ஆண்டு பாஜ காங்.
2017-18 ரூ. 210 கோடி ரூ.5 கோடி
2018-19 ரூ.1,450 கோடி ரூ.383 கோடி
2019-20 ரூ.2,555 கோடி ரூ.317 கோடி
2020-21 ரூ.22 கோடி ரூ.10 கோடி
2021-22 ரூ.1,033 கோடி ரூ.237 கோடி
2022-23 ரூ.1,300 கோடி ரூ.171 கோடி
மொத்தம் ரூ.6570 கோடி ரூ.1123 கோடி

பிப்.1,2017 தேர்தல் பத்திரங்கள் திட்டம் நிதி மசோதா மூலம் அறிமுகம்.
செப். 14, 2017 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு,
அக். 3, 2017 ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஜன. 2, 2018 தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிக்கையை வெளியிட்டது ஒன்றிய அரசு.
அக். 1, 2023 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மாற்றினார்.
அக். 31, 2023 விசாரணையை துவங்கியது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச்.
நவ. 2, 2023 தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
பிப். 15, 2024 தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டாப் 3 மாநில கட்சிகள்
ஆண்டு திரிணாமுல் பிஆர்எஸ் பிஜு ஜனதாதளம்
2018-19 ரூ.97 கோடி ரூ.141 கோடி ரூ.213.5 கோடி
2019-20 ரூ.100 கோடி ரூ.89 கோடி ரூ.50.5 கோடி
2020-21 ரூ.42 கோடி ரூ.0 கோடி ரூ.67 கோடி
2021-22 ரூ.528 கோடி ரூ.153 கோடி ரூ.291 கோடி
2022-23 ரூ.325 கோடி ரூ.529 கோடி ரூ.152கோடி
மொத்தம் ரூ.1092 கோடி ரூ.912 கோடி ரூ.774 கோடி

* 30 கட்சிகள் பெற்றது ரூ.5438 கோடி; பாஜவுக்கு மட்டும் ரூ.6570 கோடி
கடந்த 2018ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு(2023) மார்ச் மாதம் வரை மொத்தம் ரூ.12,008 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வங்கி மூலம் விற்பனையானது. இந்த பத்திரங்களை மொத்தம் 31 கட்சிகள் பெற்றன. இதில், பாஜவுக்கு கிடைத்த நிதி ரூ.6570 கோடி. இது மற்ற கட்சிகளுக்கு கிடைத்த ரூ.5,438 கோடியை விட அதிகம். அதாவது காங்கிரஸ் உள்ளிட்ட 30 அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நிதியைவிட ஒன்றியத்தில் ஆளும் கட்சியான பாஜவுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது.

* கடந்த ஆண்டில் ரூ.2,120 கோடி பாஜவுக்கு ஜாக்பாட்
கடந்த 2022-23ம் ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.2,360.8 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதில், பாஜவுக்கு மட்டும் ரூ.2,120 கோடி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.1,300 கோடி பாஜ வுக்கு கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையை காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் முந்தைய ஆண்டை விட ரூ.236 கோடி குறைவாக கிடைத்துள்ளது. அதாவது 2022-23ம் ஆண்டில் ரூ.171 கோடி மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. மாநில கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.34 கோடி கிடைத்துள்ளது. இது அக்கட்சி முந்தைய ஆண்டு பெற்றதைவிட 10 மடங்கு அதிகம்.

* ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் எதிர்ப்பை மீறி கொண்டு வந்தது ஏன்?
விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் கபில் சிபல், ‘‘தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. மேலும் இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த வேரையும் அறுத்து விடும். வெளிப்படை தன்மை இல்லாத இந்த திட்டம் ஒரு பிற்போக்கானதாகும். குறிப்பாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தேர்தல் பத்திர திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையம் இதனை வெளிப்படையாக எதிர்த்தது. இதனால் ரூபாய் நோட்டுகளின் மீதான நம்பிக்கை குறையும் என்று ரிசர்வ் வங்கியும் கூறியிருந்தது என தெரிவித்தார்.

* தேர்தல் பத்திரம் என்றால் என்ன?
தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். இந்த தேர்தல் பத்திரத்தை எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் ஸ்டேட் வங்கியிடம் இருந்து வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம்.

* யாருக்கு தரலாம்
விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கலாம். தங்களது அடையாளத்தை வெளியிட தேவையில்லை. மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

* அறிமுகம் எப்போது?
2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அமலுக்கு வந்தது.

* யார், யார் வாங்க முடியும்
KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறாது.

* குறைந்தபட்சம், அதிகபட்சம் எவ்வளவு?
ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் வங்கி விற்றது.

* ஆயுள் என்ன?
தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே..

* எப்போது வாங்கலாம்?
இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 45 நாட்களுக்கும் இவை விற்கப்படும்.

* அன்றே எச்சரித்த ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கூறுகையில், தேர்தல் பத்திரங்கள் என்பது நன்கொடை வழங்குவதில் தெளிவில்லாத நடைமுறை. இந்த பத்திரங்கள் யார் பெயரில் வாங்கப்படுகிறது என்பது தெரியாது. இதன்மூலம் பண மோசடி நடக்க அதிக வாய்ப்பு உண்டு. நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. தேர்தல் பத்திரங்களால், கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கும். மோசடி அதிகரிக்கும் என்றும் அன்றே எச்சரித்தது ரிசர்வ் வங்கி.

* முட்டு கொடுத்த ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் நன்கொடையாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதனால் பெறப்படும் தொகை அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களாக தான் காட்டப்படும். எனவே ரகசியமாகதான் வைக்க முடியும். இல்லையென்றால் பழிவாங்கும் நடவடிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க ஒன்றிய அரசு போராடி வருகிறது. இந்த சட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை 15 நாட்களில் தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தை பொறுத்தவரை பெயர் தெரியாத தன்மை என்று இருக்காது. ஏனெனில் நிதியை பெறுபவர்கள் அவர்களின் ஆதார் எண், முகவரி ஆகியவற்றை வழங்க வேண்டும். இல்லையென்றால் பத்திரத்தை வாங்க முடியாது. மேலும் இதனை காசோலை போன்றோ அல்லது வர்த்தக நாணயம் மாதிரியோ எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது. அதற்கென்று காலக்கெடு உள்ளது என தெரிவித்தார்.

* தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது கடந்த 2019ல் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் நிதியில் வெளிப்படைத்தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும். வெளிநாட்டு கார்ப்பரேட்களை நம் நாட்டு அரசியலில் நுழைய அனுமதிப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்களால் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

* இதுவரை ரூ.16518 கோடி
தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 2022-23 ம் நிதியாண்டு வரை மொத்தம் ரூ.12,008 கோடி நன்கொடை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த 2023 ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை மேலும் ரூ.4510 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. இதன்படி, கடந்த 2018 முதல் இதுவரை மொத்தம் ரூ.16,518 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடையாக பெற்றுள்ளன. இதில், பாஜவுக்கு மட்டும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. நன்கொடை கொடுத்த தொழிலதிபர்கள் விவரம் விரைவில் அம்பலமாகும் என்பதால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.

* வழக்கு போட்ட 4 பேர்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காமன் காஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் ஆகியோர் தேர்தல் பத்திரங்கள் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தினார்கள்.

* தீர்ப்பு ரத்தான சட்ட திருத்தங்கள்
தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி சட்டம், வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகிய 3 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த 3 சட்டங்களில் தேர்தல் பத்திரங்களுக்காக செய்யப்பட்ட திருத்தங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

* தேர்தல் ஆணையம் வரவேற்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையமும் வரவேற்றுள்ளதாக தேர்தல் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. அதே வேளையில், தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மைக்கு எப்போதும் அழுத்தம் கொடுத்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிப்படைத்தன்மையே ஆணையத்தின் அடையாளமாக உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

The post கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து: நிதி தந்தவர்கள், பெற்ற கட்சிகள் விவரம் மார்ச் 13க்குள் இணையதளத்தில் வெளியிட கெடு; உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...